சில மந்திரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை; ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. அதிருப்தி
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளரான ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் உள்ள சில மந்திரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை நீக்கி கட்சிக்கும், அரசுக்கும் நற்பெயரை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணியை சில மந்திரிகள் சரியாக செய்யவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதில் கூற வேண்டும். ஆனால் சில மந்திரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை.
மந்திரிசபை என்றால் முதல்-மந்திரி மட்டும் பொறுப்பானவர் அல்ல, மந்திரிகளுக்கும் அதே அளவில் பொறுப்பு உள்ளது. பெயரளவுக்கு மட்டுமே மந்திரியாக இருப்பதில் அர்த்தமில்லை. மந்திரிசபையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சில மந்திரிகளிடம் 2 இலாகாக்கள் உள்ளன. அதில் ஒன்றை சிறப்பாக செயல்படும் மந்திரிகளுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. புதிதாக மந்திரி பதவி வழங்கினால் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் துறை குறித்து அறிந்து கொள்ளவே சில மாதங்கள் ஆகும். அதனால் மந்திரிசபை விரிவாக்கத்தை தாமதிப்பதில் அர்த்தமில்லை.
இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.
Related Tags :
Next Story