உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு
காங்கயம் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம்
காங்கயம் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் மின்கோபுரங்கள்
விருதுநகரிலிருந்து திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வரையிலான புதிய மின்பாதைக்கான உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. உரிய இழப்பீடு வழங்கியபின் உயர் மின்கோபுரங்கள் அமைக்க வேண்டும் என கடந்த 2 வருடங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் சில இடங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கியும் மேலும் சில இடங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்து உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கயம், வட்டமலை அருகே உள்ள எள்ளுக்காடு என்ற தோட்டத்தில் விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழக தொழிலாளர்கள் வந்துள்ளனர். இதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து மின்கோபுரம் அமைக்க கூடாது என தடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் மின் கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று அதே இடத்தில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று மின் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு வந்த விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் மின்வாரிய செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன், தாசில்தார் ஜெகதீஷ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் தலைமையில் கால்நடைகளை பிடித்துக்கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story