வாலிபர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை


வாலிபர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 27 April 2022 9:09 PM IST (Updated: 27 April 2022 9:09 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி:
கூடலூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வாலிபர் கொலை
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டி கள்ளர் பள்ளி தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் செல்லப்பாண்டி (வயது 20). இவரும், அதே ஊரில் உள்ள ரைஸ்மில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் அஜித்குமார் (27) என்பவரும் நண்பர்கள். கடந்த 2016-ம் ஆண்டு இவர்கள் இருவரும் கருநாக்கமுத்தன்பட்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களுக்கு இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செல்லப்பாண்டியை அஜித்குமார் தாக்கினார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் செல்லப்பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது. 
இந்த சம்பவத்துக்கு பிறகு 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி செல்லப்பாண்டி தனது மோட்டார் சைக்கிளில் ரைஸ்மில் தெரு வழியாக சென்றார். அஜித்குமாரின் வீட்டுக்கு அருகில் சென்ற போது அங்கிருந்த அஜித்குமார் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தார். அப்போது அஜித்குமார், அவருடைய தந்தை கண்ணன் (46), தாய் ராமுத்தாய் (42), தம்பி வினித்குமார் (23) ஆகியோர் சேர்ந்து செல்லப்பாண்டியை தாக்கினர். பின்னர் அவர்கள் அரிவாளால் செல்லப்பாண்டியை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த கொலை குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், கண்ணன், ராமுத்தாய், வினித்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் போது வினித்குமாருக்கு வயது 17 என்பதால் அவர் தொடர்பான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மற்ற 3 பேர் தொடர்பான வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுகுமாறன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சாந்திசெழியன் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த கொலை வழக்கில் அஜித்குமார், அவருடைய தந்தை கண்ணன், தாய் ராமுத்தாய் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story