திருவட்டார் அருகே ஒரு மாணவருக்காக இயங்கும் அரசுப்பள்ளி
திருவட்டார் அருகே ஒரு மாணவருக்காக அரசுப்பள்ளி இயங்கி வருகிறது.
திருவட்டார்:
திருவட்டார் அருகே ஒரு மாணவருக்காக அரசுப்பள்ளி இயங்கி வருகிறது.
ஒரு மாணவர் படிக்கும் பள்ளி
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்குள் சென்றால், அங்கு மாணவர்களின் சிரிப்பு, பேச்சு சத்தம், ஆசிரியரின் அதட்டல் கேட்டபடி இருக்கும். ஆனால் அது எதுவும் இன்றி, ஆரவாரம் இல்லாமல் தோளோடு தோள் கொடுக்க வேறு மாணவர் இன்றி ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளி குமரி மாவட்டத்தில் உள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
ஏனென்றால் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் குமரி. அங்கு ஒரே ஒரு மாணவர் படிக்கும் பள்ளி உள்ளதா? என்று கேட்க தோன்றும். அது உண்மை தான். இந்த பள்ளி திருவட்டார் அருகே வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட கல்லங்குழியில் உள்ளது. இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தான் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார்.
பழமையான பள்ளி
வேர்க்கிளம்பி சுற்று வட்டாரத்தில் தொடங்கப்பட்ட முதல் தொடக்கப்பள்ளி இதுவாகும். 1831-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் ஆரம்பத்தில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்கள் எண்ணிக்கை இருபதுக்கும் கீழ் சென்றது. அது மூன்று ஆண்டுகளாக ஒரு மாணவர் என்ற நிலைக்கு வந்துள்ளது.
இந்த பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியை மாறுதலாகிச் சென்ற பிறகு அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த தலைமை ஆசிரியை புதிதாக பள்ளிக்கு வந்தார். அப்போது வகுப்பில் மாணவர் ஒருவர் கூட இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் தலைமை ஆசிரியை இடமாறுதல் ஆனதும், அங்கு படித்த மாணவர் முண்ட விளை அரசு தொடக்கப் பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தது தெரியவந்தது.
இதற்கிடையே புதிய தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்ததை அறிந்ததும் அந்த மாணவர் மீண்டும் பள்ளிக்கு வந்து 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஒரு மாணவர் படிக்கும் நிலைக்கு பள்ளி வர காரணம் என்ன? என அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "பள்ளிக் கூடத்துக்கு செல்லும் பாதை குறுகலாக இருப்பதாகவும், ஆட்டோ கூட செல்ல முடியாத நிலையில் பள்ளி இருக்கும் இடம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள வேறு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து விட்டனர்" என்றும் கூறினார்கள்.
வசதி செய்யப்படும்
வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார் கூறும்போது, "பள்ளிசெல்லும் பாதை குறுகலாக இருப்பதால், மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே மக்களிடம் பேசி நிலம் கையகப்படுத்தி பள்ளிக்கு செல்லும் பாதை விரிவு படுத்தி, பள்ளியில் மாணவர்கள் சேர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியை வரும் கல்வி ஆண்டில் சேர்ப்பதற்காக 6 மாணவர்களை தினமும் பள்ளிக்கூடத்துக்கு வரவழைத்து பாடம் சொல்லிக் கொடுக்கிறார். அந்த மாணவர்கள் வேறு பள்ளிக்கூடத்தின் கணக்கில் உள்ளவர்கள் ஆவார்கள்.
ஒரு மாணவர் மட்டுமே உள்ளதால், இங்கு சத்துணவு திட்டமும் செயல்படவில்லை. எனவே ஊர் மக்கள் தங்கள் பிள்ளைகளை கல்லங்குழி அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து, பள்ளி மூடப்படாமல் தொடர்ந்து இயங்க முன் வர வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
Related Tags :
Next Story