சாவில் மர்மம் இருப்பதாக புகார்; புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு
தேனி அருகே வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்ததால், புதைக்கப்பட்ட அவரது உடல் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
உப்புக்கோட்டை:
தேனி அருகே வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்ததால், புதைக்கப்பட்ட அவரது உடல் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
வாலிபர் மர்ம சாவு
தேனி அருகே உள்ள சவலப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் கன்னிசாமி (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி இரவு வழக்கம்போல் கன்னிசாமி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு இருந்த குடிநீர் குழாயில் தடுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று தூங்க சென்றார்.
மறுநாள் காலை கன்னிசாமி வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்பினர். ஆனால் அவர் அசைவின்றி கிடந்தார். உடனே குடும்பத்தினர் அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கன்னிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல், சவலப்பட்டியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது.
உடல் தோண்டி எடுப்பு
இதற்கிடையே கன்னிசாமியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் வேலுச்சாமி, வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இருப்பினும் சாவில் உண்மை தன்மையை அறிவதற்காக கன்னிசாமியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, சவலப்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்ட கன்னிசாமியின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் தேனி தாசில்தார் சரவணபாபு, பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், வெங்கடாசலபுரம் ஊராட்சி தலைவர் சந்திரா கனகராஜ், கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் கன்னிசாமியின் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story