கொரோனா பெயரில் போராட்டங்களை அரசு ஒடுக்குகிறது- டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டு


கொரோனா பெயரில் போராட்டங்களை அரசு ஒடுக்குகிறது- டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டு
x
தினத்தந்தி 27 April 2022 10:34 PM IST (Updated: 27 April 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பெயரில் போராட்டங்களை அரசு ஒடுக்குவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்

பெங்களூரு: கொரோனா பெயரில் போராட்டங்களை அரசு ஒடுக்குவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உத்தரவிட வேண்டும்

கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் இன்று (நேற்று) ஆலோசனை நடத்தினேன். கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். பா.ஜனதா அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வது என்று தீர்மானித்துள்ளோம். பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது, விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடுவது குறித்து ஆலோசித்தோம். சட்டசபை தேர்தலையொட்டி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அதன் விலையை குறைத்து முன்மாதிரியாக திகழ வேண்டும். பா.ஜனதா மேலிடம், பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்கும்படி தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா 4-வது அலை விஷயத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா பெயரில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. கொரோனா விதிகளை மீறியதாக என் மீது பல்வேறு வழக்குகளை போட்டுள்ளனர்.

போலீசார் தங்கள் விருப்பப்படி பணியாற்ற வேண்டும் என்று பா.ஜனதாவினர் நினைக்கிறார்கள். போலீசாரை தங்கள் கட்சியின் தொண்டர்களை போல் பயன்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. கலாசார காவலர்களின் அடாவடி செயல்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆதரவு அளித்துள்ளார். பள்ளிகளில் தற்போது எந்த மாதிரியான நிலை பின்பற்றப்படுகிறதோ அதை அனுசரிக்க அனுமதிக்க வேண்டும். நமது அரசியல் சாசனப்படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story