டாப்சிலிப்பில் பெண் யானை சிகிச்சை பலனின்றி சாவு


டாப்சிலிப்பில் பெண் யானை சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 27 April 2022 10:40 PM IST (Updated: 27 April 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

டாப்சிலிப் அருகே முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

பொள்ளாச்சி

டாப்சிலிப் அருகே முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

பெண் யானைக்கு சிகிச்சை

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு கும்கி யானை கலீம் உள்பட 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக விஜயலட்சுமி என்கிற யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்தது.

இதையடுத்து புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில் வன கால்நடை மருத்துவ குழுவினர் யானையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும் உணவு சாப்பிடாமல் இருந்ததால் யானை சோர்வடையாமல் இருக்க அதற்கு குளுக்கோஸ் ஊசி மூலம் செலுத்தப்பட்டு வந்தது.

சாவு

இதற்கிடையில் வனச்சரகர் காசிலிங்கம், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பாகன்கள் யானையை கண்காணித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி யானை விஜயலட்சுமி நேற்று பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

முகாமில் வேலை செய்வதற்கு வனப்பகுதியில் இருந்து கடந்த 1972-ம் ஆண்டு விஜயலட்சுமி (வயது 71) என்கிற யானை பிடித்து வரப்பட்டது. அப்போது அந்த யானைக்கு 39 வயது இருக்கும். சாலையில் மரம் விழுந்தால் அதை அகற்றுவதற்கும்,

 யானை சவாரிக்கும் யானை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் வயது முதிர்வு காரணமாக யானைக்கு எந்த வேலையும் கொடுக்காமல் ஓய்வு கொடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் யானை உணவு எதுவும் சாப்பிடாமல், மேய்ச்சலுக்கும் செல்லாமல் இருந்தது. இதை தொடர்ந்து சிறப்பு வல்லுனர் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வன கால்நடை மருத்துவ அலுவலரால் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று (நேற்று) யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. யனையின் உடல் நாளை (இன்று) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story