ஓய்வூதிய பலன் கிடைக்கும் வரை பணி வழங்க வேண்டும்
ஓய்வூதிய பலன் கிடைக்கும் வரை பணி வழங்க வேண்டும் என்று சிங்கோனா டேன்டீ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட வளர்ச்சிக்கழகத்தின் தேயிலை தோட்டங்களில் சிங்கோனா பகுதியில் உள்ளது. இங்கு பணிபுரிந்து ஓய்வுபெற்ற 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒய்வூதியம், பணிக்கொடை, சம்பளத்தில் பிடித்தம் செய்த தொழிலாளர் வைப்புநிதி ஆகிய எந்தவித ஒய்வூதிய பலன்களும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு டேன்டீ நிர்வாகம் தற்காலிக பணி வழங்கி வந்தது. ஆனால் தற்போது ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணி வழங்கி வந்ததை டேன்டீ நிர்வாகம் நிறுத்தி விட்டது. இதனால் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், வேலை இல்லாமலும், ஒய்வூதியம், ஒய்வூதிய பலன்கள் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற டேன்டீ தொழிலாளர்கள் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் செயலாளர் பிரபாகரன் தலைமையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வரை வேலை வழங்க வேண்டும் என்று கோரி டேன்டீ கோட்ட மேலாளர் விக்ரமிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து அவர் கூறுகையில், டேன்டீ நிர்வாக இயக்குனரிடம் இருந்து உரிய உத்தரவுகள் வந்தால் மட்டுமே இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கோஷங்கள் எழுப்பிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story