லாரி மோதி தச்சு தொழிலாளி பலி


லாரி மோதி தச்சு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 27 April 2022 10:58 PM IST (Updated: 27 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே லாரி மோதி கேரளாவை சேர்ந்த தச்சு தொழிலாளி பலியானார். இதையொட்டி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே லாரி மோதி கேரளாவை சேர்ந்த தச்சு தொழிலாளி பலியானார். இதையொட்டி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
லாரி மோதல்
தூத்துக்குடியில் இருந்து எம் சாண்ட் மணல் பாரத்துடன் ஒரு லாரி குமரி மாவட்டம் வழியாக கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் செல்லும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் கீழே தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். மேலும் அவர் வந்த மோட்டார் சைக்கிளும் இரு துண்டாக உடைந்தது. 
டிரைவர் தப்பி ஓட்டம்
இதில் லாரி சம்பவ இடத்திலேயே கவிழ்ந்தது. அதில் இருந்த மணலும் கீழே சரிந்தது. உடனே லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
தச்சு தொழிலாளி
போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது, அதில் டிரைவிங் லைசென்சு ஒன்று இருந்தது. அதில் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை, பள்ளிச்சல், வலியவிளாகம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் உண்ணி (வயது39) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் மூலம் இறந்த வர் உண்ணி, தச்சு தொழிலாளி என்பதும்  தெரிய வந்துள்ளது.
அவர் நேற்று அதிகாலை சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு நண்பர்களுடன் புறப்பட்டு வந்துள்ளார். இவர் தனியாக ஒரு மோட்டார் சைக்கிளிலும், பின்னால் நண்பர்கள் இருவர் இன்னொரு மோட்டார் சைக்கிளிலும் வந்துள்ளனர். அப்போது தான் விபத்து நடந்துள்ளது.
இன்னொருவர் காயம்
விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் இன்னொரு மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி கிடந்தது. அதன் அருகில் இன்னொருவர் படுகாயத்துடன் கிடந்தார். அவர் லாரிக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற போது இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 
அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

Next Story