ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சங்கர் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மண்டல தலைவர் பழனி, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன், மாவட்ட தலைவர் ராமலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஊராட்சி செயலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும், 3 ஆண்டுகள் பணி முடித்த ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டாரத்தில் பணியிட மாறுதல் செய்வதுடன், ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பதிவுறு எழுத்தருக்கு உண்டான அனைத்து அரசின் சலுகைகளையும் உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர்கள் சக்திவேல், தமிழ்ச்செல்வன், தேவராஜ் மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story