அரசு பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால் திருமண மண்டபத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்
அரசு பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால் திருமண மண்டபத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே குமரமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த மாணவர்கள் உயர்கல்வி கற்க திருச்செங்கோடு அல்லது உலகப்பம்பாளையம் அரசு பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்கு போதிய டவுன் பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வந்தனர்.
இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குமரமங்கலம் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி என 2 பள்ளிகளும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாததால் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வகுப்புகள் நடத்தப்படும் நிலை உள்ளதாக தெரிகிறது. மேலும் முகூர்த்த நாட்களில் திருமண மண்டபத்தில் வகுப்புகள் நடத்த முடியாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் உள்ளது.
இதற்கிடையே ஒவ்வொரு வகுப்பிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர்ந்து பாடங்களை கற்கும் நிலையும் உள்ளது. மேலும் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் படித்து வருகின்றனர். ஆனால் மாணவிகளுக்கு என போதிய கழிப்பிட வசதி இல்லாததால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே குமரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story