ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2022 12:14 AM IST (Updated: 28 April 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம், 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 3-ம் கட்ட போராட்டமாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வெங்கடாசலம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
சிறப்பு காலமுறை ஊதியம்
ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு அரசாணையை விரைந்து வெளியிட்டு அமல்படுத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கிட வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வுகளை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரப்படுத்தும் அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். 
மாதாந்திர ஓய்வூதியம்
கொரோனா பேரிடரில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்கிட வேண்டும். ஊராட்சி செயலாளர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி, அதனை அரசு கருவூலத்தில் வழங்கிட வேண்டும்.
பேரிடர் மேலாண்மை துறையை ஊரக வளர்ச்சி துறையில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story