பணிச்சுமையால் மன உளைச்சல்: மங்களமேடு சரக பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு டி.ஜி.பி.க்கு அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு
பணிச்சுமையால் மன உளைச்சல் ஏற்படுவதாக மங்களமேடு சரக பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு டி.ஜி.பி.க்கு அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் சந்தியா (வயது 28). நேரடி போலீஸ் துணை சூப்பிரண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மங்களமேடு சரகத்தில் நியமிக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி பணியில் சேர்ந்தார்.
இவர் வசித்து வருவது திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமம் ஆகும். ஆனால் இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சந்தியா கடந்த ஒரு மாதமாக சென்னையில் பயிற்சியில் உள்ளார். இந்த பயிற்சி இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது.
இந்த நிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்தியா கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை தாங்க முடியவில்லை. எனக்கு உடல்நல பிரச்சினைகள் உள்ளன. பணிச்சுமையால் பெரிதும் மன உளைச்சல் அடைந்துள்ளேன்.தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனம் செல்கிறது. என் கணவர், பெற்றோர் மற்றும் மாமியார் ஆகியோருடன் நல்ல குடும்ப வாழ்க்கையை நடத்துகிறேன்.
இருப்பினும் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருக்கிறேன். தயவு செய்து என் உயிரை காப்பாற்றுங்கள். பணிச் சுமை குறைந்த சேவை பயிற்சி மையம் அல்லது போலீஸ் பயிற்சி மையம் (பி.ஆர்.எஸ்.) அல்லது பட்டாலியன் போன்ற இடங்களுக்கு என்னை மாற்ற வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழக டி.ஜி.பி.க்கு அனுப்பிய கடிதம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடிதத்தின் நகல் தற்போது போலீசாரிடையே வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story