தினசரி சந்தை, பூ மார்க்கெட் கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்கக்கோரி வழக்கு


தினசரி சந்தை, பூ மார்க்கெட் கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்கக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 28 April 2022 12:22 AM IST (Updated: 28 April 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

தினசரி சந்தை, பூ மார்க்கெட் கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்கக்கோரி வழக்கில் மதுரை கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை, 
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த வீரமணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஆட்டோ டிரைவராக உள்ள என்னை, உசிலம்பட்டி நகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். உசிலம்பட்டி கடந்த 1995-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து நகராட்சி பகுதியில் உள்ள பொதுச்சொத்துகள் அனைத்தும் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நகராட்சியிடம் ஒப்படைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நகராட்சி பகுதியில் உள்ள வாரச்சந்தை, தினசரி சந்தை, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகள் தற்போதும் ஊராட்சி ஒன்றியத்தின்கீழ் உள்ளது.
இதனால் நகராட்சிக்கு போதுமான வருமானம் இல்லை. எனவே சந்தை மற்றும் பூ மார்க்கெட் கடைகள் அமைந்துள்ள இடங்களை உசிலம்பட்டி நகராட்சியிடம் ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
எனவே எனது மனுவின் அடிப்படையில் சந்தை, பூ மார்க்கெட் கடைகளை உசிலம்பட்டி நகராட்சியிடம் ஒப்ப டைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் லட்சுமணன் ஆஜராகி, உசிலம் பட்டி நகராட்சி கமிஷனர் ஏற்கனவே சந்தை கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்கும்படி ஊராட்சி ஒன்றிய கமிஷனருக்கு கடிதம் அனுப்பி  உள்ளார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது சட்டவிரோதம். இந்த நகராட்சியில் நிதிப்பற்றாக்குறையை போக்க, சந்தை கடைகளை நகராட்சி வசம் கொண்டு வருவது அவசியம் என்று வாதாடினார்.
இதையடுத்து இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், உசிலம்பட்டி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய கமிஷனர்கள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

Next Story