நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்


நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 28 April 2022 12:25 AM IST (Updated: 28 April 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரெயில் நிலைய பயணிகளுக்கு பரிசோதனை, கிருமி நாசினி தெளித்தல் போன்றவை மும்முரமாக நடக்கிறது.

நெல்லை:
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரெயில் நிலைய பயணிகளுக்கு பரிசோதனை, கிருமி நாசினி தெளித்தல் போன்றவை மும்முரமாக நடக்கிறது.

தொற்று அதிகரிப்பு

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கிருமிநாசினி தெளிப்பு

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் தற்போது முக்கிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக நெல்லை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பஸ்-ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

நெல்லை வண்ணார்பேட்டை பஸ்நிறுத்த பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

தடுப்பூசி

இந்தநிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு மருத்துவ குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பயணிகளுக்கு தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
அங்கு வரும் பயணிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு செல்கின்றனர். மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

90 சதவீதம் பேர்

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 90 சதவீதம் பேர் முதல்தவணை தடுப்பூசியும், 60 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

தகுதிவாய்ந்த பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் தடுப்பு போட்டுக்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story