நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும்


நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும்
x
தினத்தந்தி 28 April 2022 12:52 AM IST (Updated: 28 April 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

பெரம்பலூர், 
தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அந்த கூட்டமைப்பின் நிறுவனர் காரை சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை துணை ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் வரவேற்றார். கூட்டத்தில் நரிக்குறவர் என்கிற குருவிக்கார இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் கொடுத்த மனுவினை பெற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதற்கு கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.க்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், நடப்பு நாடாளுமன்ற கூட்ட தொடரில் வலியுறுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.க்கும், ரவிக்குமார் எம்.பி.க்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேற்கண்டவைகள் தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டன.
ஏற்கனவே 15-வது லோக்சபாவில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியின பட்டியலில் இணைப்பதற்காக மத்திய-மாநில அரசுகளின் அலுவலக பணிகள் முடிவுற்று, மத்திய மந்திரி அவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு 2014-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா நிலுவையில் உள்ளது. மீண்டும் இந்த மசோதா 16-வது லோக்சபாவில் மத்திய மந்திரி அவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு 2017-ல் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே வருகிற நாடாளுமன்றத்தில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இதில் காலதாமதம் எற்பட்டால் புதுடெல்லியில் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story