வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட தக்காளி செடிகள்
தக்காளிக்கு விலை இருந்தும் வேர் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டதால் பலனில்லை என விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
தாயில்பட்டி,
தக்காளிக்கு விலை இருந்தும் வேர் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டதால் பலனில்லை என விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
பெரும் நஷ்டம்
தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரம், வெற்றிலையூரணி, சுப்பிரமணியபுரம், சல்வார்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, வெம்பக்கோட்டை, கோமாளி பட்டி, சிப்பிபாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது.
இதனால் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, சுரைக்காய், உளுந்து, மிளகாய் போன்றவற்றை சாகுபடி செய்துள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் பெய்த சாரல் மழை காரணமாக செடிகளில் வேர் அழுகல் நோய் தாக்கியது. அதிலும் குறிப்பாக தக்காளி செடியில் வேர் அழுகல் நோயினால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
வேர் அழுகல் நோய்
இதுகுறித்து வெற்றிலையூரணியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
தாயில்பட்டி பகுதிகளில் கிணறுகளிலும், கண்மாய்களிலும் தண்ணீர் வற்றாமல் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் தக்காளி உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர்.
இதில் சமீபத்தில் பெய்த மழையில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியதால் வேர் அழுகல் நோய் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக மற்ற செடிகளை விட தக்காளி செடியில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்ற மாதம் வரை தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. தற்போது கிலோ ரூ. 40 வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
நிவாரணம்
இந்தநிலையில் சாரல் மழையால் அதிக அளவு தக்காளி செடிகள் சேதமடைந்ததால் தக்காளியை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வேர் அழுகல் நோயினால் தக்காளி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் கஷ்டப்பட்டு சாகுபடி செய்த முதலீடு கூட எடுக்க முடியுமா என்ற கவலையில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ்வ்வாறு அவர் கூறினர்.
Related Tags :
Next Story