ஒளிந்து விளையாடியபோது பரிதாபம்: ஐஸ்பெட்டிக்குள் பதுங்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி சாவு


ஒளிந்து விளையாடியபோது பரிதாபம்: ஐஸ்பெட்டிக்குள் பதுங்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி சாவு
x
தினத்தந்தி 28 April 2022 2:07 AM IST (Updated: 28 April 2022 2:07 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சன்கூடு அருகே ஒளிந்து விளையாடியபோது ஐஸ்பெட்டிக்குள் பதுங்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு:

கண்ணாமூச்சி விளையாட்டு...

  மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா மசகே கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜூ-சிக்க தேவம்மா. இந்த தம்பதியின் மகள் பாக்யா(வயது 12). இதேபோல் ராஜநாயக்கா-கவுரம்மா தம்பதியின் மகள் காவ்யா(7). இந்த நிலையில் நேற்று மாலை இந்த 2 சிறுமிகளும், சக நண்பர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினர். அதன்படி ஒருவர் கண்ணை மூட, மற்றவர்கள் ஒளிந்து தேடி கண்டுபிடித்து விளையாடினர்.

  அதன்படி கண்ணாமூச்சியின் ஒரு ஆட்டத்தில் ஒருவர் கண்ணை மூட மற்றவர்கள் மறைமுகமான இடங்களில் ஒளிந்து கொண்டனர். ஆனால் சிறுமிகள் பாக்யாவும், காவ்யாவும் அப்பகுதியில் கடை முன்பு இருந்த ஐஸ் பெட்டிகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். பின்னர் ஐஸ்பெட்டியின் வெளிப்புறமாக இருந்த மூடியை மூடிகொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக ஐஸ்பெட்டிகளின் மூடியின் தாழ்பாள் மூடியதாக தெரிகிறது.

2 சிறுமிகள் சாவு

  இதையடுத்து சிறிதுநேரம் கழித்து 2 சிறுமிகளும், வெளியே வர மூடியை திறக்க முயன்றுள்ளனர். ஆனால் வெளிப்புறமாக தாழிட்டு கொண்டதால் அவர்களால் மூடியை திறக்க முடியவில்லை.
  இதனால் சிறுமிகள் வெளியே வரமுடியாமல் ஐஸ்பெட்டிக்களுக்குள் உள்ளேயே பரிதவித்துள்ளனர். இதனால் சிறிதுநேரத்தில் காற்று கிடைக்காமல் மூச்சத்திணறி பாக்யாவும், காவ்யாவும் பரிதாபமாக உயரிழந்து உள்ளனர்.

  இதற்கிடையே குச்சி ஐஸ் வியாபாரி, பெட்டிகளை சுத்த செய்ய மூடியை திறந்துள்ளார். அதில் அவர், 2 பெட்டிகளில் சிறுமிகள் இறந்து பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கிராம மக்கள், பெற்றோருக்கு தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்து பெற்றோர் சிறுமிகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

சோகம்

  இதுபற்றி தகவல் அறிந்த நஞ்சன்கூடு புறநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் கண்ணாமூச்சி விளையாடும்போது ஐஸ்பெட்டிக்குள் போய் ஒளிந்து கொண்டதால் 2 சிறுமிகளும் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது.

  இதையடுத்து 2 சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நஞ்சன்கூடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story