வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் வைப்பு
சேலம் புதிய பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்:-
சேலம் புதிய பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வாடகை பாக்கி
சேலம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள மேல் தளத்தில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாக கடைகளுக்கு 1-வது பிளாக்குக்கு இதுவரை வாடகை பாக்கி தொகையாக ரூ.46 லட்சத்து 94 ஆயிரத்து 805 செலுத்தப்படாமல் உள்ளது. அதேபோல் மற்றொரு கடைக்கு ரூ.37 லட்சத்து 64 ஆயிரத்து 744 வாடகை பாக்கி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.
மேலும் 3-வது பிளாக்குக்கு வாடகை பாக்கி தொகையாக ரூ.37 லட்சத்து 60 ஆயிரத்து 784-ம், 4-வது பிளாக்குக்கு வாடகை பாக்கி தொகையாக ரூ.46 லட்சத்து 74 ஆயிரத்து 950-ம் இதுவரை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.
கடைகளுக்கு சீல் வைப்பு
இதனிடையே சம்பந்தப்பட்ட கடைகளின் குத்தகை தாரர்களுக்கு கடை வாடகையை செலுத்துமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் அறிவுறுத்தியும் இதுவரை கடை வாடகை பாக்கியை செலுத்தவில்லை. எனவே, மேற்படி குத்தகை தாரர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யப்பட்டதோடு மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சூரமங்கலம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை உடனடியாக செலுத்தாவிட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என மாநகராட்சி நிர்வாகத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story