60 வார்டுகளிலும் பாரபட்சம் இல்லாமல் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்படும்
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகள் பாரப்பட்சம் இல்லாமல் நிறைவேற்றப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
சேலம்:-
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகள் பாரப்பட்சம் இல்லாமல் நிறைவேற்றப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
மாநகராட்சி கூட்டம்
சேலம் மாநகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் சூரமங்கலம் மண்டல குழு தலைவர் கலையமுதன் எழுந்து நின்று, தஞ்சையில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பான இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி இயல்பு கூட்டத்தின் 16 தீர்மானங்களை நகரமைப்பு குழு தலைவர் ஜெயக்குமார் வாசித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-
செல்வராஜ் (அ.தி.மு.க.):- சூரமங்கலம் மண்டலத்தில் அரசாணை இல்லாமல் 2 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் ரூ.800 படித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றார்.
பாரபட்சம் இல்லாமல்...
குணசேகரன் (தி.மு.க.) :- பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செய்ய வேண்டும். மேலும் இந்த பணியை விரைந்து முடித்து சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.
யாதவமூர்த்தி (அ.தி.மு.க.) :- புதிதாக வரையறை செய்யப்பட்ட 36-வது வார்டுக்கு இதுவரை பில் கலெக்டர், தூய்மை பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. எனது வார்டில் உள்ள குறைகளை ஆணையாளரிடம் மனுவாக வழங்கி இருந்தேன். அதில் ஒன்று கூட தீர்மானத்தில் இல்லை. மேலும் மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ள 7 வார்டுகளும் புறக்கணிக்கப்படுகின்றன என்றார். இதற்கு மேயர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசும் போது, 60 வார்டுகளையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறேன். வளர்ச்சி திட்ட பணிகள் பாரப்பட்சமின்றி மேற்கொள்ளப்படும் என்றார்.
தூய்மை பணியாளர்கள்
துணை மேயர் சாரதாதேவி (காங்கிரஸ்):- சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தேவையான சீருடைகள், உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றார்.
கலையமுதன் (தி.மு.க.) :- மாநகராட்சியில் கூடுதலாக தூய்மை பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேபோல் மேலும் சில கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் பேசும் போது, நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாநகராட்சி பகுதிகளில் 175 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் கொரோனா தடுப்பூசி 2 தவணையும் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களையும் தடுப்பூசி முகாமிற்கு அழைத்து வந்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்
பின்னர் மேயர், ஆணயாளர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளின் செல்போன் எண் அடங்கிய துண்டு பிரசுரங்களை மேயர் ராமச்சந்திரன் வெளியிட்டார்.
Related Tags :
Next Story