போலி வாடிக்கையாளர் சேவை மைய எண் மூலம் மளிகை கடைக்காரரிடம் மோசடி செய்த ரூ1¼ லட்சம் மீட்பு
போலி வாடிக்கையாளர் சேவை மைய எண் மூலம் மளிகைக்கடைக்காரரிடம் மோசடி செய்த பணத்தில் ரூ.1¼ லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
தர்மபுரி:
போலி வாடிக்கையாளர் சேவை மைய எண் மூலம் மளிகைக்கடைக்காரரிடம் மோசடி செய்த பணத்தில் ரூ.1¼ லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
பணம் மோசடி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 40). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் ஒரு வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி கொண்டு பணத்தை இணையதளம் மூலம் செலுத்தினார். அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அவர் தொடர்பு கொண்டார்.
அப்போது அதில் பேசிய நபர் அவருடைய செல்போனில் ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். அதை செய்த சற்று நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 740 மாயமானது. போலியான வாடிக்கையாளர் சேவை மைய எண் மூலம் செயலியை பதிவேற்றம் செய்ய கூறி பணத்தை எடுத்து அந்த நபர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
புகார் தெரிவிக்க வேண்டும்
இதனால் அதிர்ச்சியடைந்த பாபு இணையதளம் மூலம் தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அந்த பணத்தை மீட்க, தொழில்நுட்ப நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 923 மீட்கப்பட்டது. இந்த பணத்தை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பாபுவிடம் ஒப்படைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், நம்பகத்தன்மையற்ற செயலிகளை யாராவது இன்ஸ்டால் செய்ய சொன்னால் அதை தவிர்க்க வேண்டும். வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். எண் உள்ளிட்ட விவரங்களை செல்போன் மூலம் யாருக்கும் பகிர்வதை தவிர்க்க வேண்டும். செல்போன் மூலம் சந்தேகத்துக்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story