கர்நாடகத்தில் தினசரி கொரோனா பரிசோதனையை 30 ஆயிரமாக அதிகரிக்க முடிவு; பிறகு பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் தினசரி கொரோனா பரிசோதனையை 30 ஆயிரமாக அதிகரிக்க முடிவு; பிறகு பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 28 April 2022 2:45 AM IST (Updated: 28 April 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 30 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

கொரோனா 4-வது அலை

  நாட்டில் தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது தவிர கேரளா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஜூன் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கான்பூர் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் பாதிப்பு உயர்ந்து வருவதால், அது கொரோனா 4-வது அலையின் அறிகுறியாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

  இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி மூலம் கலந்து ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடகத்தில் இருந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி கலந்து கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பரிசோதனை எண்ணிக்கை

  கொரோனா பரவல் குறித்து பிரதமர் நடத்திய கூட்டத்தில் காணொலி மூலம் கலந்து கொண்டேன். கர்நாடகத்தில் தற்போதைய கொரோனா பாதிப்புகள் குறித்து எடுத்து கூறினேன். கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது. கடந்த 9-ந் தேதிக்கு பிறகு பெங்களூருவில் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. அதனால் தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 30 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதில் 10 ஆயிரம் பரிசோதனைகள் பெங்களூருவில் நடத்தப்படும். மீதமுள்ள 20 ஆயிரம் பரிசோதனைகள் பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்.

  வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும். அவர்கள் இங்கு வந்த பிறகு அவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஆஸ்திரேலியா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள ஆஸ்பத்திரி வசதிகள் குறித்து எடுத்து கூறினேன். அரசு ஆஸ்பத்திரிகளில் 50 ஆயிரம் படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் படுக்கைகளும் இருக்கின்றன.

தடுப்பூசி போட அனுமதி

  கொரோனா 4-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள கர்நாடகம் தயாராக இருப்பதாக நான் பிரதமரிடம் கூறினேன். கர்நாடகத்தில் தற்போது 60 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார். இதை ஒரு இயக்கத்தை போல் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

  15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கூறினார். மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும், முககவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல், கண்காணித்தல் போன்றவற்றை தீவிரமாக மேற்கொள்ள பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதார நடவடிக்கைகள்

  அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டதால் கொரோனா 3-வது அலை கட்டுப்படுத்தப்பட்டது என்று கூறினார். முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை நடைபெற வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளும் பாதிப்பு இன்றி நடைபெற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

  கர்நாடகத்தில் 6 முதல் 12 வயது வரையும், 15 முதல் 18 வயது வரையும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செலுத்தப்படும். ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்படும். அதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அதை மரபணு பரிசோதனைக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளோம்.

ஆக்சிஜன் உற்பத்தி

  கர்நாடகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். மேலும் 1,100 டன் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். மாவட்ட ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மேலும் பலப்படுத்தப்படும். பெங்களூருவின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம். பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது போல் மாநிலங்களும் வரியை குறைத்தன. ஆனால் சில மாநிலங்கள் விலையை குறைக்கவில்லை. அதனால் அருகில் உள்ள மாநிலங்கள் பாதிக்கப்படுவதாக பிரதமர் கூறினார். அதனால் விலையை குறைக்காத மாநிலங்கள் அவற்றை குறைக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  இதில் வீட்டு வசதி மந்திரி சோமண்ணா, தலைமை செயலாளர் ரவிக்குமார், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story