சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் டி.ஜி.பி. திடீர் இடமாற்றம் - கர்நாடக அரசு அதிரடி உத்தரவு


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் டி.ஜி.பி. திடீர் இடமாற்றம் - கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 28 April 2022 3:05 AM IST (Updated: 28 April 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் தொடா்பாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பவுலை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:
  
சி.ஐ.டி. விசாரணை தீவிரம்

  கர்நாடகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதன்பிறகு, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது கலபுரகி மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா பிரமுகரான திவ்யாவுக்கு சொந்தமான பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 50 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த முறைகேடு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் சி.ஐ.டி. போலீசார், பிளாக் காங்கிரஸ் தலைவர், அவரது சகோதரர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான எம்.ஒய்.பட்டீலின் பாதுகாவலர், போலீஸ்காரா்கள் உள்பட 16 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

அலுவலகத்தில் சோதனை

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திவ்யா, அரசு நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இதையடுத்து, போலீஸ் ஆட்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான அம்ரித் பவுலுக்கு சொந்தமான அலுவலகத்தில் சி.ஐ.டி. போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கி இருந்ததாகவும் தகவல் வெளியானது. இது கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யான அம்ரித் பவுலுக்கு நெருக்கடியை கொடுத்தது.

கூடுதல் டி.ஜி.பி. பணி இடமாற்றம்

  அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஆட்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அம்ரித் பவுல், தொடர்ந்து அதே பிரிவில் பணியாற்றுவதால், இந்த வழக்கில் சி.ஐ.டி. போலீசாரால் நியாயமான முறையில் விசாரணை நடைபெற சாத்தியமில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வந்தனர். இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ரித் பவுலை நேற்று அதிரடியாக பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  போலீஸ் ஆட்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த அம்ரித் பவுல் இடமாற்றம் செய்யப்பட்டு, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு (பெங்களூரு) கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்து வரும் ஹிதேந்திராவுக்கு கூடுதலாக போலீஸ் ஆட்சேர்ப்பு பிரிவையும் சேர்த்து கவனிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த அருண் சக்கரவர்த்திக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. மேற்கண்ட தகவல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பு

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அம்ரித் பவுலை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியதால், அதுபற்றி போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இந்த பணி இடமாற்றத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி திடீரென்று பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story