10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
நிலக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த சிறுமியின் தாயும் சிக்கினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 31). இவர், சித்தரேவு பகுதியை சேர்ந்த 14 வயதான 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்தார். இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறையினருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் சமூகநலத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், வத்தலக்குண்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்து மாணவிக்கு திருமணம் நடந்தது உறுதியானது.
இதனையடுத்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கஸ்தூரி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து மாணவியை திருமணம் செய்த மகேந்திரனை கைது செய்தார். இதேபோல் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story