தூத்துக்குடியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்காணல் திடீர் நிறுத்தம்


தூத்துக்குடியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்காணல் திடீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 April 2022 5:11 PM IST (Updated: 28 April 2022 5:11 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்காணல் திடீரென நிறுத்தம் செய்யப்பட்டதால், தூத்துக்குடியில் விண்ணப்பதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தூத்துக்குடி:
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்காணல் திடீரென நிறுத்தம் செய்யப்பட்டதால், தூத்துக்குடியில் விண்ணப்பதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கால்நடை உதவியாளர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 30 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரத்து 891 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான நேர்காணல், தூத்துக்குடி கால்நடை ஆஸ்பத்திரியில் கடந்த 25-ந்தேதி தொடங்கியது.
தினமும் 1,400 பேர் வரை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் நேர்காணல் நடத்தப்பட்டது. நேற்றும் நேர்காணலில் பங்கேற்பதற்காக அழைப்பாணை பெறப்பட்ட விண்ணப்பதாரர்கள் குவிந்தனர்.
திடீர் நிறுத்தம்
அவர்கள் நேர்காணலுக்கு ஆர்வமுடன் காத்திருந்தனர். அப்போது இந்த நேர்காணல் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும், இந்த பணிக்கான நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஏமாற்றத்துடன் திரும்பினர்
அங்கு திரண்டு இருந்த விண்ணப்பதாரர்களை கலைந்து செல்லுமாறு கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளும், போலீசாரும் அறிவுறுத்தினர். இதனால் விண்ணப்பதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புதிய தேதி பின்னர் அறிவிப்பு
தூத்துக்குடியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் கடந்த 25-ந்தேதி முதல் வருகிற 2-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடந்தது. இந்த நிலையில் 28.4.2022 முதல் 2.5.2022 வரை நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
எனவே, தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் வருகிற 2-ந்தேதி வரை நடைபெற இருந்த நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம். நேர்காணல் குறித்து புதிய தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நெல்லையிலும் தள்ளிவைப்பு
இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு பாளையங்கோட்டை டி.டி.டி.ஏ. பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை நேர்காணல் நடைபெற இருந்தது.
தற்போது இந்த நேர்காணல் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் உத்தரவின்பேரில், நிர்வாக காரணங்களினால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் நேர்காணல் நடத்துவது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story