ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்


ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 April 2022 7:10 PM IST (Updated: 28 April 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

ராணிப்பேட்டை

ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில், கலவை ஏரிக்கரையில் படிக்கட்டு அமைக்க வேண்டும், காப்பீடு தொகை வழங்குவதில் தெளிவு இல்லை, தெங்கால் பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும், நவ்லாக், புளியங்கண்ணு ஆகிய பகுதிகளில் நிலப்பட்டா வழங்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் காலை 6 மணி முதல் கொள்முதல் செய்ய ஏற்பாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு செய்யவும் வேண்டும்.

 நவ்லாக் அரசு பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

2020-21-ம் ஆண்டின் பயிர் இன்சூரன்ஸ் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை, 11 கிராமங்களில் ஏரி, குளம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், மணப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் பழுதடைந்துள்ளது. இதனை சீர்செய்து திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் கூறினர். 

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், விவசாய கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை பிணை இல்லா கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் வேளாண் இடுபொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கவும், உற்பத்திக்குத் தேவையான நிதி உதவி பெறவும் முடியும். 

விவசாய கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்க் கடன்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும், மேலும் மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கி கடன் பெற முடியும்.

மானியம்

கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். 
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, துணை இயக்குனர் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story