தேனியில் நாளைமறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட விழா புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
தேனியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட விழா நாளைமறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தேனி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக தேனி மாவட்டத்துக்கு வர இருக்கிறார். இதற்கான அரசு விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகே புறவழிச்சாலையோரம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள காலியிடத்தில் பிரமாண்ட மேடையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் நாளை(வெள்ளிக்கிழமை) இரவு தேனி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விருந்தினர் மாளிகை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நாளை காலை 10 மணியளவில் தேனியில் நடக்கும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
11 ஆயிரம் பயனாளிகள்
இந்த விழாவில் மாவட்டத்தில் முடிவடைந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்த விழாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு துறைகளின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கி பேசுகிறார்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவுக்கான பாதுகாப்பு பணியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் மதுரை ஐ.ஜி. அஷ்ரா கார்க், 2 போலீஸ் டி.ஐ.ஜி., 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 11 மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக மதுரை, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக நேற்று தேனிக்கு வந்தனர். அவர்கள் தேனி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அமைச்சர் ஆய்வு
இந்த விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தேனியில் விழா மேடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடமும், எம்.எல்.ஏ.க்களிடமும் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், கே.எஸ்.சரவணக்குமார், மகாராஜன், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story