கூடலூர் அருகே பெரிய முத்தப்பன் கோவிலில் வாழைக்குலைகளை வைத்து வழிபாடு
கூடலூர் அருகே பெரிய முத்தப்பன் கோவிலில் வாழைக்குலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
கூடலூர்
கூடலூர் அருகே பெரிய முத்தப்பன் கோவிலில் வாழைக்குலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
பெரிய முத்தப்பன் கோவில் விழா
கூடலூர் பகுதியில் ஆதிவாசி மற்றும் மவுண்டாடன் செட்டி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர தாயகம் திரும்பிய தமிழர்கள் உள்ளனர். இவர்கள் இன்று வரை தங்களது பாரம்பரிய விழாக்கள் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பாடந்தொரை அருகே தயிர் மட்டம்பகுதியில் பெரிய மற்றும் சின்ன முத்தப்பன் கோவில் உள்ளது. இங்கு மவுண்டாடன் செட்டி மற்றும் ஆதிவாசி மக்கள் பூர்வீகமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பெரிய மற்றும் சின்ன முத்தப்பன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வாழைக்குலைகளுடன் ஊர்வலம்
தொடர்ந்து கூடலூர் அத்திப்பாளியில் இருந்து வாழைக்குலைகள், இளநீர் தலையில் சுமந்தவாறு மேளதாளங்கள் முழங்க நம்பாலக்கோட்டை வேட்டைக் கொருமகன் கோவில் சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக பாடந்தொரை, மூச்சிகண்டி கிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு சென்றது. அங்கு முத்தப்பனின் அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஊர்வலம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அங்கு வாழைக்குலைகள், இளநீர் படையலிட்டு சுவாமியை பொதுமக்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
பாரம்பரிய வழிபாடு
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய கோவில் விழா நடைபெற்றது. இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பு விரதமிருந்து பக்தர்களின் தோட்டங்களில் விளைந்துள்ள வாழைக் குலைகளை அருளாளி சிறப்பு பூஜை செய்து அறுவடை செய்வார். பின்னர் வாழை மற்றும் இளநீர் குலைகளை பக்தரின் வீட்டில் வைத்து 7 நாட்கள் தினமும் பூஜை நடைபெறும். 8-வது நாள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து சுவாமிக்கு படையலிடப்படும். பாரம்பரியமாக இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story