கூடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பழுதடைந்த 3 பஸ்களை இயக்க தடை


கூடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பழுதடைந்த 3 பஸ்களை இயக்க தடை
x
தினத்தந்தி 28 April 2022 7:40 PM IST (Updated: 28 April 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை மற்றும் பணிமனையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள மூன்று பஸ்களை இயக்க தடை விதித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கூடலூர்

கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை மற்றும் பணிமனையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள மூன்று பஸ்களை இயக்க தடை விதித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

பழுதடைந்த பஸ்கள் இயக்கம்

கூடலூர் அரசு போக்குவரத்து கழகம் கிளை அலுவலகம் மற்றும் பணிமனையின் கட்டுப்பாட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், ஊட்டி- கூடலூர் மற்றும் கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். இதை உறுதி செய்யும் வகையில் பயணிகளுடன் செல்லும் அரசு பஸ்கள் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்களில் அடிக்கடி பழுதடைந்துள்ளதால் பயணிகளை சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். போதிய உதிரிபாகங்கள் இல்லாததால் பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியவில்லை என போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது.

இயக்க தடை

இந்த நிலையில் கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் கூடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பணிமனையில் உள்ள பஸ்களை பரிசோதனை செய்தார். இதில் சில பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து 618, 633, 540 பதிவெண்கள் கொண்ட 3 பஸ்களை இயக்க தடை விதித்தார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் கூறியதாவது:- கூடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 3 பஸ்களில் பயணிகள் அமர்ந்து பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் அந்த பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போக்குவரத்துக் கழக நிர்வாகம் 3 பஸ்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர் முறையாக தகுதி சான்று பெற்ற பின்னரே பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story