ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் -உதவியாளர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெண் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் திருவஞ்சேரியை சேர்ந்தவர் பியூலா சார்லஸ். இவர், நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அதற்கு கிராம நிர்வாக அலுவலர் தீபா(வயது 47), கிராம நிர்வாக உதவியாளர் தனலட்சுமி(50) ஆகியோர் பட்டா பெயர் மாற்றம் செய்து தர பியூலா சார்லசிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டு, கடைசியாக ரூ.13 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா வழங்கப்படும் என கூறினர்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பியூலா சார்லஸ், இதுபற்றி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை செங்கல்பட்டு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீஸ் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதற்காக ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
அதன்படி பியூலா சார்லஸ், திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று லஞ்ச பணம் ரூ.13 ஆயிரத்தை கிராம நிர்வாக உதவியாளர் தனலட்சுமியிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை வாங்கி, கிராம நிர்வாக அலுவலர் தீபாவிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து, லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story