தூத்துக்குடியில் ரூ.5 கோடி செம் மரக்கட்டைகள் சிக்கியது
தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக பதுக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக பதுக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக அவ்வப்போது போதைப்பொருட்கள், செம்மரக்கட்டைகள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றது. இதனால் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியா போர்ட் கிலாங் துறைமுகத்துக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த பிரிவு அதிகாரிகள் நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சரக்கு பெட்டக குடோனில் சோதனை நடத்தினர்.
இரும்பு குழாய்க்கு அடியில் செம்மரக்கட்டை
அந்த குடோனில் மலேசியாவுக்கு அனுப்புவதற்காக 9 பெரிய மரப்பெட்டிகளில் இரும்பு குழாய்கள் வைத்து மூடப்பட்டு இருந்தது. இந்த பெட்டிகளின் மொத்த எடை 12 டன் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடனடியாக அந்த பெட்டிகளை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தனர்.
முதல் பெட்டியை திறந்தபோது, பெட்டியின் மேல் பகுதியில் இரும்பு குழாய்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிகாரிகள் பக்கவாட்டில் உள்ள பலகையையும் அகற்றினர்.
அப்போது இரும்பு குழாய்களுக்கு அடியில், செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இரும்பு குழாய் போன்று காட்சி அளிப்பதற்காக செம்மரக்கட்டைகள் மீது கருப்பு நிற பாலித்தீன் கவரால் சுற்றப்பட்டு இருந்தது.
ரூ.5 கோடி மதிப்பு
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 9 பெட்டிகளையும் திறந்தனர். அந்த பெட்டிகளின் அடிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 8 டன் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருப்பூரில் இருந்து அந்த மரப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டதாக ஆவணங்களில் கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றவர்களை பிடிப்பதற்காக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செம்மரக்கட்டைகள் வெளிநாடுகளில் மருந்து பொருளாகவும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story