கோடரியால் வெட்டி தொழிலாளி படுகொலை;17 வயது மகன் வெறிச்செயல்
தார்வார் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் கோடரியால் தொழிலாளியை வெட்டி கொன்ற 17 வயது மகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
உப்பள்ளி:
குடிபோதையில் தகராறு
தார்வார் தாலுகா மங்கலகட்டி கிராமத்தை சேர்ந்தவர் புட்டலிங்கா(வயது 48). தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 17 வயதில் மகன் ஒருவன் உள்ளான். இதற்கிடையே அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான புட்டலிங்கா வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி, மகனிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவும் புட்டலிங்கா மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி, மகனிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் புட்டலிங்காவுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் புட்டலிங்கப்பா, வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து வந்து மனைவி, மகனை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
தொழிலாளி படுகொலை
இதனால் ஆத்திரமடைந்த மகன், புட்டலிங்காவிடம் இருந்து கோடரியை பிடுங்கி தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த புட்டலிங்கப்பா நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே புட்டலிங்கா பரிதாபமாக இறந்துவிட்டார்.
கைது
இதுபற்றி தார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். விசாரணையில், குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்து தந்தை என்றும் பாராமல் புட்டலிங்காவை, அவரது மகனே கோடரியால் வெட்டி கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து புட்டலிங்காவின் மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story