தனியார் கல்லூரியில் 40 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 40 மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சரவணம்பட்டி
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 40 மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
40 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்
கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் கே.ஜி.கல்வி நிறுவனங்கள் உள்ளது. இங்கு கடந்த 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 3 நாட்கள் தேசிய அளவிலான பிசியோதெரபி மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து 46 கல்லூரிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசியோதெரபி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் 3 நாட்கள் கல்லூரி வளாகத்தில் தங்கியிருந்து கருத்தரங்குகளில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கே.ஜி.பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் 40 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அந்த மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் மாணவர்களின் உடல்நிலை குறித்து ஒருசில பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சில பெற்றோர் கல்லூரிக்கு நேரில் வந்துள்ளனர். இதையடுத்துதான் கல்லூரி மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது வெளியே தெரியவந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகராட்சி சுகாதாரகுழு தலைவர் மாரிசெல்வன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமாரை தொடர்புகொண்டு, அந்த கல்லூரியில் ஆய்வு செய்ய கூறினார்.
அதனைத்தொடர்ந்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி. கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 40 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பரபரப்பு
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவையில் கே.ஜி.கல்வி நிறுவனத்தில் படிக்கும் 40 மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இேத கல்லூரியில் படித்த 46 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அப்போதும் கல்லூரி நிர்வாகம் இதுபற்றிய தகவலை வெளியில் சொல்லாமல் மறைத்தது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகத்துக்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story