காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 62 வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போனது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சீபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய தாலுகா பகுதிகளில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், யாரும் உரிமை கோரப்பாடத நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சீபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பயன்பாடு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ந ஆட்டோ, ஷேர் ஆட்டோ, லோடு ஆட்டோ, பஸ், வேன், லாரி உள்ளிட்ட 62 வாகனங்களுக்கான பொது ஏல விற்பனை நேற்று வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்தது.
அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டார் வாகனங்கள் பராமரிப்பு பிரிவு அலுவலர் மோகன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ஸ்ரீதர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மூலம் டெண்டர் மற்றும் பொது ஏலத்தில் ரூ.15 லட்சத்துக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் காஞ்சீபுரம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆர்வத்துடன் வந்து ஏலம் கேட்டு வாகனங்களை எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story