பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்


பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்
x
தினத்தந்தி 28 April 2022 10:28 PM IST (Updated: 28 April 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணிக்கின்றனர்.

அனுப்பர்பாளையம்
திருப்பூரில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
பஸ் படிக்கட்டில் பயணம்
திருப்பூரில் இருந்து கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படிக்க செல்கின்றனர். 50 சதவீத மாணவர்கள்  கல்லூரி பஸ்களில் சென்றாலும், மற்ற மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோவைக்கு சென்று வருகின்றனர். இதனால் காலை நேரத்தில் திருப்பூரில் இருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும், மாலையில் கோவையில் இருந்து திருப்பூர் வரும் பஸ்களிலும் அதிக கூட்டம் காணப்படுகிறது. 
இதனால் திருப்பூரில் இருந்து பல்லடம் மற்றும் அவினாசி வழியாக கோவைக்கு செல்லும் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.  திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அவினாசி வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் இதுபோன்று மாணவர்கள் பயணித்து வருகின்றனர். 
காலை 7.30 மணி முதல் 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒருமுறை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இருந்தாலும் படிக்கட்டு பயணம்தான் தொடர்கிறது. பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தாலும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிகளில் நின்று பயணிப்பது கவலை அளிப்பதாகும்.
 இதேபோல் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான அரசு பஸ்கள் இருந்தாலும் மாணவிகள் உள்பட மாணவர்கள் தனியார் பஸ் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் அந்த நேரங்களில் செல்லும் தனியார் பஸ்களில் அளவுக்கு அதிக பயணிகளை ஏற்றி செல்ல வேண்டியதும், மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
 நடவடிக்கை 
 இதுமட்டுமின்றி தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க செய்கின்றனர் என்றும், மாணவ-மாணவிகள் செல்லும் ஒருசில தனியார் பஸ்கள் மாணவர்களை தவிர அவசரத்திற்கு செல்லும் மற்ற பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர் என்ற புகாரும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.  காலை மற்றும் மாலை நேரங்களில் கோவைக்கு செல்லும் தனியார் பஸ்கள் மாணவர்களுக்கான திருப்பூரில் சில பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்கின்றன என்ற புகாரும் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி படிக்கட்டு பயணங்களை தடுக்கவும், விதிமுறைகளை மீறி பஸ்களை இயக்கும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதேபோல் அதிகாரிகள் கடமைக்காக ஒருநாள் மட்டும் வாகன தணிக்கை செய்யாமல் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. படிக்கட்டில் பயணம், நொடிப்பொழுதில் மரணம் என்று படிக்கட்டுக்கு மேல் பகுதியில் வாசகம் இருந்தும்,அதை படித்து விட்டு அடுத்த நொடி மறந்து விட்டு பயணத்தை தொடர்வதுதான் வேடிக்கை. 
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
எனவே மாணவ-மாணவிகளின் எதிர்காலம் கருதியும், படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் அசம்பாவிதத்தை தவிர்க்கவும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story