சமையல் தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


சமையல் தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 28 April 2022 10:38 PM IST (Updated: 28 April 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஓரின சேர்க்கை விவகாரத்தில் சமையல் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

திருப்பூர்
திருப்பூரில் ஓரின சேர்க்கை விவகாரத்தில் சமையல் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
கல்லால் தாக்கி கொலை
திருப்பூர் வீரபாண்டி குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி ராஜேந்திரன் (வயது 60). முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி இப்ராகிம் (40). இவர்கள் இருவரும் நண்பர்கள். மேலும் இவர்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருந்துள்ளனர். கடந்த 28-5-2017 அன்று இரவு யூனியன் மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் நொய்யல் ஆற்றுக்குள் சென்று இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர்.
இவ்வாறு இருப்பதற்கு ராஜேந்திரன் அவ்வப்போது இப்ராகிமுக்கு ரூ.500, ரூ.1,000 கொடுப்பது வழக்கம். சம்பவத்தன்று இப்ராகிம், ராஜேந்திரனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் ராஜேந்திரன் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த இப்ராகிம் தலையில் கல்லைப் போட்டு ராஜேந்திரனை கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரத்தை எடுத்துவிட்டு தப்பினார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்ராகிமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில் கொலை குற்றத்துக்காக இப்ராகிமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். 
சிறப்பாக புலன் விசாரணை செய்த வடக்கு போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.

Next Story