குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 28 April 2022 10:45 PM IST (Updated: 28 April 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தெரிவித்தார்.

சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) இப்ராகிம், நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருள்களை வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ் படித்தார். 
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சாமிநாதன் (தி.மு.க):- சீர்காழி நகராட்சி வளாகத்தில் நீர்த்தேக்க தொட்டி அருகில் கழிவறை கட்டிடம் கட்டக்கூடாது.
ராஜசேகரன் (தே.மு.தி.க):- கொரோனா 4-வது அலை தீவிரமாக இருப்பதால் நகராட்சி சார்பில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாசன வாய்க்காலில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன்(பா.ம.க):- சீர்காழி நகர் பகுதியில் 6 வார்டுகளை மையமாக வைத்து ஒரு நகர ஆரம்ப துணை சுகாதார நிலையம் தொடங்க வேண்டும். 
குடிநீர் தட்டுப்பாடு 
முழுமதி (ம.தி.மு.க):-எனது வார்டில் கடந்த 3 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோவில்பத்து பகுதியில் சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 
ராமு (தி.மு.க.):-சீர்காழி நகராட்சிக்கு வக்கீலை நியமிப்பது குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்
ராஜேஷ் (சுயேச்சை):-சீர்காழியில்  அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ரயில்வே துறைக்கு அனுப்ப வேண்டும். சீர்காழியிலிருந்து ரெயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமாமணி (அ.தி.மு.க) :-எனது பகுதியில் குடியிருப்போர் பெரும்பான்மையோர் கோவில் இடங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினர்.
நடவடிக்கை
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகர்மன்ற தலைவர் பதிலளித்து பேசுகையில், சீர்காழி நகர் பகுதியில் உள்ள அனைத்து பொது சுகாதார வளாகங்களையும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பை அள்ளும் வாகனங்களை சரிசெய்து செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கை பம்புகள் கூடுதலாக அமைத்து தரப்படும் என்றார்.  
பின்னர் துணைத் தலைவர் விடுத்த கோரிக்கையின்பேரில், உறுப்பினர்களிடையே ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு நகர்மன்றத்துக்கு வக்கீல் பன்னீர்செல்வம் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story