வடமாநிலத்தவர்களை பணி அமர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் வட மாநிலத்தவர்களை பணி அமர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் வட மாநிலத்தவர்களை பணி அமர்த்தியதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வக்கீல் வேலு.குணவேந்தன், இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம், தமிழ் தேசிய பேரியக்க பொறுப்பாளர் அரவிந்த், பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழுத் தலைவர் தமிழன் கணேசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பரபரப்பு
ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை பணி அமர்த்தியதைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை அடங்கிய மனுவை தபால் நிலைய அதிகாரியிடம் கொடுக்க சென்றனர்.
அதற்கு அங்கிருந்த வடமாநில தபால் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரப்படுத்தினர். பின்னர், போராட்ட குழுவினர் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story