நாமக்கல் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏற்றி வந்த கார் மோதி தொழிலாளி சாவு 480 கிலோ குட்கா பறிமுதல்
நாமக்கல் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏற்றி வந்த கார் மோதி தொழிலாளி சாவு 480 கிலோ குட்கா பறிமுதல்
நாமக்கல்:
நாமக்கல் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏற்றி வந்த கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து சுமார் 480 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி சாவு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செங்கனூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது45). இவர் நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணி அளவில் இவர் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அங்கு சாலையை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து வேகமாக வந்த கார் மாரிமுத்து மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
480 கிலோ குட்கா பறிமுதல்
இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் டயர் பஞ்சராகி கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காரில் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 480 கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா) மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் மாரிமுத்து மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் அது தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த கார் கர்நாடக மாநில பதிவெண் கொண்டது என்பது தெரியவந்தது. எனவே கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story