1098 என்கிற இலவச எண்ணிற்கு குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் கொல்லிமலை மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை


1098 என்கிற இலவச எண்ணிற்கு குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் கொல்லிமலை மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 28 April 2022 11:21 PM IST (Updated: 28 April 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

1098 என்கிற இலவச எண்ணிற்கு குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் கொல்லிமலை மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை

நாமக்கல்:
கொல்லிமலை பழங்குடியின மாணவிகள் 1098 என்கிற இலவச எண்ணிற்கு குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி உள்ளார்.
பசுமை வீடு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பல்வேறு துறைகளில் கள ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக விளிப்பு நிலை மக்களான பழங்குடியின மக்களுக்கு அரசின் திட்டங்களான வீட்டுமனைப்பட்டா, அவர்கள் குடியிருப்பதற்கு முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேவைக்கேற்ப வழங்க அறிவுறுத்தினார்.
தேவனூர்நாடு அரிப்பிலாப்பட்டி, பெரும்பரப்புபட்டி ஆகிய இடங்களில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பொதுமக்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் தற்போது குடியிருக்கும் வீடுகளின் நிலை குறித்தும் நேரில் ஆய்வு செய்தார்.
உணவு பட்டியல்
தொடர்ந்து வாழவந்தி நாடு அரசு பழங்குடியின மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, உணவு பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் விடுதியில் மாணவிகளின் இருப்பு குறித்து பதிவேட்டில் உள்ள பெயர்களை வாசித்து, அவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள் என்றும், அவர்கள் படிக்கும் வகுப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
விடுதியில் உள்ள தினசரி உணவு வழங்கும் பட்டியலை பார்வையிட்டு, என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்று மாணவிகளிடம் கேட்டு, பட்டியலின்படி உணவு சரியாக வழங்கப்பட்டு உள்ளதை உறுதி செய்தார். பாய், கம்பளி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளதா? என்று கேட்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டார். அதன் அடிப்படையில் துணிதுவைக்க கூடுதல் வசதியும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க தண்ணீர் தேங்கா வண்ணம் சீர் செய்யும் பணி உள்ளிட்ட மாணவிகளின் கோரிக்கைகளை மேற்கொள்ள பழங்குடியின நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
குழந்தை திருமணம்
மாணவிகளிடம் 1098 என்ற எண் எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்று கேட்ட கலெக்டருக்கு, மாணவிகள் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் செய்வதற்கான தொலைபேசி எண் என்று ஒரு சேர தெரிவித்தார்கள். நீங்கள் யாரும் இதுவரை இந்த எண்ணில் புகார் செய்துள்ளீர்களா ? என்று கேட்டு, உங்கள் பகுதியில் 18 வயதிற்கு குறைவாக வயது உள்ளவர்களுக்கு திருமணம் நடத்த முயற்சிகள் நடைபெற்றாலோ, யாரேனும் தவறுகள் செய்ய முயற்சித்தாலோ உடனடியாக இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்க வேண்டும். உங்கள் விவரங்களை புகார் செய்யும்போது தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
தற்போது நீங்கள் அனைவரும் கல்வி கற்க அரசு அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளது. பழங்குடியினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு உள்ளது. எனவே அனைவரும் பிளஸ்-2 முடித்தவுடன் உயர்கல்வியில் சேர்வதுடன், போட்டித்தேர்வுகளில் பங்குபெற்று அரசு உயர்பதவிகளை அடைந்து பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், கொல்லிமலைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது பழங்குடியின நல அலுவலர் ராமசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாசில்தார் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மாதேஸ்வரி சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story