தென்னக ரெயில்வே அதிகாரிகள் ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
பயண சீட்டுக்கான தொகையை திரும்ப வழங்காத விவகாரத்தில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
திருவாரூர்:-
பயண சீட்டுக்கான தொகையை திரும்ப வழங்காத விவகாரத்தில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
பயண சீட்டு
திருவாரூர் ராமநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். வக்கீலான இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதியில் இருந்து திருவாரூருக்கு ரெயிலில் செல்ல ரூ.525-க்கு பயண சீட்டு முன்பதிவு செய்து உள்ளார்.
ஆனால் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்து, ஆன்லைனில் பயண சீட்டை கேன்சல் செய்து உள்ளார். இதையடுத்து பயண சீட்டுக்கான தொகை திரும்ப வழங்கப்படும் என அவருக்கு குறுஞ்செய்தியும் வந்துள்ளது.
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு
இதுகுறித்து திருவாரூர் ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் கேட்டபோது, திருப்பதியில் தான் பயண சீட்டுக்கான தொகையை திரும்பப்பெற வேண்டும் என கூறி உள்ளனர். தொடர்ந்து அவர் கேட்டபோது 4 நாட்கள் ஆகிவிட்டதால் பயண சீட்டை கேன்சல் செய்ததற்கான பணத்தை திருப்பித்தர இயலாது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மதியழகன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி நேற்று தீர்ப்பு கூறினார்.
ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு
அப்போது தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர், தலைமை வணிக மேலாளர் மற்றும் திருவாரூர் ரெயில் நிலைய அதிகாரி ஆகியோர் பாதிக்கப்பட்ட மதியழகனுக்கு ரூ.2 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும், பயண சீட்டுக்கான தொகையான(ரீ பண்ட்) ரூ.525-க்கு 9 சதவீத வட்டியுடன் 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
உரிய காலத்துக்குள் இந்த தொகையை திருப்பித்தர தவறினால் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் எனவும், மேலும் செலவு தொகையாக ரூ.10 ஆயிரத்தையும் 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story