புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு


புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 28 April 2022 11:38 PM IST (Updated: 28 April 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், காளைகள் முட்டியதில் 22 பேர் காயம் அடைந்தனர்.

ஜெயங்கொண்டம், 
புனித செபஸ்தியார் ஆலயம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு  நடைபெற்றது. இதையொட்டி வாடிவாசல் அமைக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் போடப்பட்டிருந்தன. காலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன.
இதையடுத்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதைதொடர்ந்து உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
சீறிப்பாய்ந்த காளைகள்
முதலில் வாடிவாசலில் இருந்து புனித செபஸ்தியார் ஆலய காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் பல காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து களத்தில் நின்று ஆட்டம் காட்டியது. ஆவேசத்துடன் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடியது. திமிறிய காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கினர். ஒரு சில காளைகள் சுற்றி சுழன்று வீரர்களை பந்தாடியது. இந்த ஜல்லிக்கட்டில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. இதில் 200 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். 
22 பேர் காயம்
இப்போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்து விளக்கு, சைக்கிள், சில்வர் அண்டா, குடம், சேர், கட்டில், பணமுடிப்பு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களான கீழப்பலூரை சேர்ந்த சுரேஷ் (வயது 24), பருக்கல் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (35), கீழக்கொளத்தூர் வடக்கு தெருவை சார்ந்த ராமச்சந்திரன் (25), கீழக்காவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (20) உள்பட மொத்தம் 22 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு ஏற்கனவே தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு பணி
ஜல்லிக்கட்டை ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story