வெவ்வேறு இடங்களில் என்ஜினீயர் உள்பட 6 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் என்ஜினீயா் உள்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் என்ஜினீயா் உள்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
என்ஜினீயா்
ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை கிராமத்தை சேர்ந்தவர் பீமன் (வயது 54), விவசாயி. இவருடைய இளைய மகன் மகா பிரதாப் (வயது 27). என்ஜினீயரான இவர் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் மது அருந்தும் பழக்கம், சூதாட்டம் போன்ற பழக்கம் இருந்தாகவும் கூறப்படுகிறது. நேற்று அவருடைய தந்தை பீமனிடம் ரூ.50 ஆயிரம் கேட்டதாகவும், அவர் தர முடியாது என்று கூறியதால் மகா பிரதாப் மனம் உடைந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்செடிக்கு அடிக்க வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கிய அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
கூலித்தொழிலாளி
கிருஷ்ணகிரி அருகே பெரிய மோட்டூரை சேர்ந்தவர் தனசேகர் (20). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனசேகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடல்நலக்குறைவால்...
காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பயாஷ் பாஷா. இவருடைய மனைவி சாஜிதா (37). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சாஜிதா இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணற்றில் குதித்து தற்கொலை
பர்கூர் தாலுகா அஞ்சூர் அருகே உள்ள கொள்யூரை சேர்ந்தவர் நீலா (66). சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட அவர் இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி நீலா அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் கிணற்றில் மிதந்த நீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி
பாரூர் அருகே உள்ள மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் பாலசுப்பிரமணியம் (22), விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி
தேன்கனிக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (48), கூலித் தொழிலாளி. இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிசசைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story