கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் 11 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் கருவிகள்-கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 11 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
தர்மபுரி:
கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 11 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
வேளாண் கருவிகள்
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் சிறு குறு விவசாயிகள் பயனடையும் வகையில் 2021-2022-ம் ஆண்டில் கூட்டு பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 8 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 100 சிறு குறு விவசாயிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கூட்டு பண்ணைய திட்டத்தில் தர்மபுரி மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறையின் சார்பில் 11 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பங்களிப்புடன் ரூ.65 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் டிராக்டர், புல் நறுக்கும் கருவி, களை எடுக்கும் கருவி, துளையிடும் கருவி, பவர்டில்லர், ரோட்டாவேட்டர், விசைத்தெளிப்பான் உள்பட 45 வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
குத்தகை
நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி பேசும் போது,‘இந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கொள்முதல் செய்த கருவிகள் வேளாண் குழு உறுப்பினர்களுக்கு குத்தகைக்கு விடப்படும். இந்த குத்தகை தொகையை பயன்படுத்தி இந்த குழுக்கள் கூடுதல் வேளாண் கருவிகளை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது குழுவிற்கு சுழல் நிதியாகவும் குத்தகை தொகையை பயன்படுத்தி கொள்ளலாம்’ என்றார்.
இதில் வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சவுமியன், வேளாண் துணை இயக்குனர் குணசேகரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் மாலினி, வேளாண் உதவி இயக்குனர்கள் சசிகலா, தேன்மொழி, சித்ரா, இளவரசி, இளங்கோவன், சுப்பிரமணியன், மோகன் மற்றும் துறை அலுவலர்கள், உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story