சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில்  பிரதோஷ சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 29 April 2022 12:14 AM IST (Updated: 29 April 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

வத்திராயிருப்பு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
சுந்தரமகாலிங்கம் கோவில்
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்தக் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். 
பின்னர் காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். மேலும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பகுதியில் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாதர் சாமி கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை கோவில் அன்னம் காத்தருளிய சாமி உள்ளது. இந்த கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. 
அதேபோல ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் தவ நந்தீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள் புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோச விழாவை முன்னிட்டு சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Next Story