சந்தூர் திரவுபதி அம்மன் கோவில் விழா: பக்தர்கள் துடைப்பத்தால் அடிவாங்கி வினோத வழிபாடு
சந்தூர் திரவுபதி அம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் துடைப்பத்தால் அடி வாங்கி வினோத வழிபாடு நடந்தது.
மத்தூர்:
சந்தூர் திரவுபதி அம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் துடைப்பத்தால் அடி வாங்கி வினோத வழிபாடு நடந்தது.
மகாபாரத திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 3-ம் ஆண்டு மகாபாரத திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவும், கொல்லாபுரி அம்மன் நாடக சபா கூச்சானூர் ராஜாவின் தெருக்கூத்து நாடகம் நடந்தது.
இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், வில் வளைப்பு, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், அர்ச்சுனன் தபசு நாடகம் உள்பட பல்வேறு நாடக நிகழ்ச்சிகள் நடந்தன.
வினோத வழிபாடு
இறுதி நாளான நேற்று துரியோதனன் படுகளம் நாடக நிகழ்ச்சி நடந்தது. நாடக கலைஞர்கள் அம்மனை வேண்டி கொண்டு, கிராமத்தை சுற்றிக்கொண்டு சண்டை போட்டு கொண்டனர். பின்னர் துரியோதனன், பீமன் சண்டையில் துரியோதனன் இறப்பது போல் நாடக குழுவினர் நடித்து காண்பித்தனர். மேலும், பாஞ்சாலி சபதம் முடிக்கும் வகையில் துரியோதனனை படுகளம் செய்து அதன் ரத்தத்தில் கூந்தலை முடிக்கும் நிகழ்வு நடந்தேறியது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு துடைப்பத்தால் அடி வாங்கி வினோத வழிபாடு செய்தனர். பின்னர், திரவுபதியம்மன் வீதி உலா எடுத்து சென்று கங்கையில் நீராடுதல், சிறப்பு பூஜைகளும் செய்தனர்.
இதையடுத்து நடந்த தீ மிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள். இந்த விழாவில் சந்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story