இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி


இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
x
தினத்தந்தி 29 April 2022 12:27 AM IST (Updated: 29 April 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் கடல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படை வீரர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் இந்திய கடற்படை விமான தளம் செயல்பட்டு வருகின்றது. அதுபோல் இந்த கடற்படை விமான தளத்தில் 4 ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத விமானம் ஒன்றும் பாதுகாப்பு பணிக்காக உள்ளது. இந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் வடக்கு கடல் பகுதியான பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடற்படை வீரர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை குறித்த பயிற்சியானது வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக உச்சிப்புளி கடற்படை விமான தளத்தில் இருந்து இயக்கப்படும் ஹெலிகாப்டரில் கடற்படை கமாண்டோ வீரர்கள் இருப்பதுடன் ஹெலிகாப்டர்களை வேகமாக இயக்குவது, தாழ்வாக இயக்குவது, குறிப்பாக கடல்மீது வேகமாகவும், தாழ்வாகவும் இயக்குவது குறித்தும், சந்தேகப்படும்படியாக கடலில் செல்லும் படகுகளை தாழ்வாக பறந்து விரட்டி பிடிப்பது மற்றும் கடலில் தத்தளிப்பவர்களை பாதுகாப்பாக கயிறு கட்டி மேலே மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சியானது பாம்பன் பாலம் அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக நடந்து வருகின்றது. கடற்படை வீரர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான பாதுகாப்பு ஒத்திகை குறித்த பயிற்சி என்றும் இன்னும் 3 நாட்களுக்கு இந்த பயிற்சி நடைபெறும் என்றும் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் பயிற்சிக்காக ராமேசுவரம் கடற்படை நிலையத்துக்கு சொந்தமான ரோந்து படகு ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த ரோந்து படகில் கடற்படை வீரர்களை இறக்கியும், கயிறு கட்டி மேலே தூக்குவது போன்ற பயிற்சியும் நடைபெற்று வருகின்றன. இந்த பயிற்சியை ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Next Story