ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு; பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து போராட்டம்
சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் அம்பேத்கர்நகரில் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாலமான் வாய்க்கால் கரையோரம் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோர் தாங்களாகவே வீடுகளை காலி செய்தனர். 60-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்யவில்லை.
இதற்கிடையே நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாற்று இடம் கொடுத்து விட்டு, வீடுகளை அகற்றக்கோரி காந்தி சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.
வாக்குவாதம்
இந்த நிலையில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 2 பொக்லைன் எந்திரங்களுடன் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள 66 வீடுகளை இடிக்க பாலமன் கரைக்கு சென்றனர்.
அப்போது அப்பகுதி மக்கள் மாற்று இடம் கொடுத்து விட்டு வீடுகளை இடியுங்கள் என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பொக்லைன் எந்திரங்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகாரிகள் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்ததோடு, அங்குள்ள பொது கழிப்பறையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.
தாசில்தார் பேச்சுவார்த்தை
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்ற தாசில்தார் ஹரிதாஸ், ஒரு வார காலத்துக்குள் நீங்கள் வீடுகளை காலி செய்யவேண்டும் என கூறினார். இதனை ஏற்ற அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story