நாட்டுப்படகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
அதிராம்பட்டினத்தில் மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. மேலும் நாட்டுப்படகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. மேலும் நாட்டுப்படகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீன்வரத்து இல்லை
தஞ்சை மாவட்டம் கடற்பகுதியான மறவக்காடு, அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரைதெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் நாட்டு படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது கடலில் மீன் வரத்து இல்லாமல் மீனவர்கள் கடந்த 10 தினங்களாக ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.
டீசல் செலவு
இது குறித்து ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:- நாங்கள் நாட்டு படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து அன்றாடம் எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக நாங்கள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வெறும் கையுடன் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறோம்.
நாங்கள் படகுக்கு செலவு செய்யும் டீசல் செலவு தொகைக்கு கூட எங்களுக்கு வருமானம் கிடைப்பதில்லை.
பராமரிப்பு பணிகள்
இதனால் நாங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். ஏப்ரல் மாதத்தில் வாவல் மீன்கள்அதிக அளவில் வலையில் சிக்கும் ஆனால் கடந்த 2 வருடமாக இந்த மாதத்தில் மீன்கள் வரத்து மிக குறைவாக உள்ளது.
இதனால் நாங்கள்(மீனவர்கள்) வலைகளை சீரமைத்து நாட்டுப் படகுகளை கரைக்கு மேல் இழுத்து படகுகளை சுத்தப்படுத்தி அதற்கு வர்ணம் தீட்டி படகுகளில் பராமரிப்பு பணிகளை செய்து வருகிேறாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story