ரூ.1.40 லட்சத்துக்கு 5 மாத குழந்தை விற்பனை; தாய் உள்பட 4 பேர் கைது


ரூ.1.40 லட்சத்துக்கு 5 மாத குழந்தை விற்பனை; தாய் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 1:33 AM IST (Updated: 29 April 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

உவரியில் ரூ.1.40 லட்சத்துக்கு 5 மாத பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி தங்கசெல்வி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். விஜயன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தங்கசெல்வி, உவரி அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜூன் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்துள்ளார். அவர் மூலம் கடந்த 5 மாதங்களுக்கு  முன்பு தங்கசெல்விக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. 

அந்த குழந்தையை தங்கசெல்வி வீட்டிற்கு எடுத்து வந்த பிறகு, கூட்டப்பனை சுனாமி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரியப்பன், அவரிடம் இருந்து பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார். பின்னர் மாரியப்பன் குழந்தையை கேரள மாநிலம் கோட்டயம் அர்பூர்கராவைச் சேர்ந்த செல்வகுமார்-சந்தனவின்சியா என்ற தம்பதியிடம் விற்றார். அந்த தம்பதியினர் குழந்தையை கோட்டயம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அந்த குழந்தை விலைக்கு வாங்கப்பட்டதும், அவருடைய பெற்றோர் விவரமும் தெரியவந்தது.

இதையடுத்து கேரள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் நெல்லையில் உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சர்ச்சிசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சர்ச்சிஸ் உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, கேரளாவில் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டனர். இதுதொடர்பாக குழந்தையின் தாய் தங்கசெல்வி, குழந்தையை வாங்கிய கேரள தம்பதி செல்வகுமார், சந்தனவின்சியா, குழந்தையை விற்பனை செய்த மாரியப்பன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் தந்தை அர்ஜூனை தேடி வருகின்றனர்.



Next Story